அண்மைய செய்திகள்

புதன், 3 டிசம்பர், 2008

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் - ஒபாமா!

"பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அந்த நாடு அழிக்காவிட்டால் இந்தியாவே நேரடியாக போர் தொடுத்து தீவிரவாத முகாம்களை அழிக்கலாம்'' என்று ஒபாமா தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள ஒபாமா, `பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க உரிமை உண்டு' என்றார்.

அவருடைய அரசில் வெளியுறவு மந்திரியாக நியமிக்க உள்ள ஹிலாரி கிளிண்டன், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகும் முன்னாள் கடற்படை தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர், அட்டர்னி ஜெனரல், ஐ.நா.வுக்கான தூதர் போன்றவர்களை ஒபாமா அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, `பாகிஸ்தானில் உள்ள அல்-கொய்தா முகாம்களை பாகிஸ்தான் அழிக்காவிட்டால் அமெரிக்கா குண்டு வீசி அழிக்கும் என்று ஒபாமா கூறியது பற்றி கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்து ஒபாமா கூறியதாவது:-

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்களும் பலியாகி உள்ளனர். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இந்தியாவுடன் என்னுடைய நிர்வாகம் (புதிய அரசு) மிக வேகமாக இணைந்து செயல்படும். உலக நாடுகளும் இதற்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

உலகில் உள்ள எந்தவொரு இறையாண்மை மிக்க நாடும் தன்னை பாதுகாக்க முழு உரிமை உண்டு. எனவே, பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் இருப்பது குறித்த உறுதியான ஆதாரங்கள் இருந்தால் இந்தியாவே நேரடியாக போர் தொடுத்து தீவிரவாதிகளை அழிக்கலாம்.

மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த விசாரணையில் உறுதியான ஆதாரங்களை முதலில் இந்தியா பெற வேண்டும். அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்கிறதா என்பதை இந்தியா பார்க்க வேண்டும். அதன் பிறகு நேரடி நடவடிக்கையை தொடங்கலாம்.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் நிலைமை குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. என்னுடைய புதிய பாதுகாப்பு குழுவினருடன் இன்று (நேற்று) காலையில் முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். அதில் மும்பை தாக்குதல் பற்றியே விவாதம் நடந்தது. அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொல்லும் தீவிரவாதத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்று உலக நாடுகளை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக