அதிமுக சார்பில் ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மு.சந்திரா, திமுக சார்பில் வி.பி.ராஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரா 58,320 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வி.பி.ராஜன் 57,827 வாக்குகள் பெற்றார்.
அதிமுக எம்.எல்.ஏ. சந்திராவின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், கிறிஸ்தவ பள்ளர் சமுதாயத்தை சார்ந்தவர் சந்திரா. ஆனால் அவர் தன்னை இந்து பள்ளர் என்று கூறி போலியான ஆதாரங்களை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.
அவரது இயற்பெயர் குளோரி சந்திரா. அவரது குடும்பம் பாரம்பரியமான கிறிஸ்தவ குடும்பம். ஆனால் இவர் தன்னை இந்து பள்ளர் என்று உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ளார்.
எனவே சந்திராவின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்த தங்கமுத்து, சந்திரா, கிறிஸ்தவ பள்ளர் என்பதற்கான 29 ஆதார ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கை நீதிபதி நாகப்பன் விசாரித்தார். இந்த வழக்கில் சந்திரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 1994ம் ஆண்டே நான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டேன். எனது கணவர் பெயர் முருகன். நான் தேவேந்திரகுல வேளாளர் சமுகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறேன்.
இந்து கோவில்கள் கட்டுவதற்கு நன்கொடைகள் வழங்கி உள்ளேன் என்று கூறியிருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சந்திரா தரப்பு வாதங்களை நிராகரித்து இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், இந்து பள்ளர் என்பதற்கான ஆதாரத்தை சந்திரா தாக்கல் செய்யவில்லை.
அவரது கணவர் பெயர் சூசை மாணிக்கம் என்பதற்கான ஆதாரம் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து கோவில்கள் கட்ட நன்கொடை வழங்கியிருப்பதாக சந்திரா கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை.
எனவே இந்து பள்ளர் என்று கூறி சந்திரா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், சந்திராவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் வந்த திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் நீதிமன்றத்தை வேண்டியுள்ளார்.
அவ்வாறு அறிவிப்பதற்கு இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பான மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
மூலம்: தட்ஸ்தமிழ்
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக