அமெரிக்க பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த சரிவு 2007ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டதாக தேசிய பொருளாதார ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் இதுவரை சந்தித்திராத சரிவு நிலைக்குப் போய் விட்டது. ஆனால் இந்த சரிவு திடீரென ஏற்பட்டதல்ல, கடந்த ஆண்டே இது தொடங்கி விட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
2ம் உலகப் போருக்குப் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக அமெரிக்க பொருளாதாரம் பெரும் அடியை சந்தித்துள்ளதாகவும் இந்த குழு தெரிவிக்கிறது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கமிட்டி உறுப்பினர்கள் கூட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2001ம் ஆண்டுடன் அமெரிக்காவில் பொருளாதார விரிவாக்கம் நின்று போய் விட்டது. 2001ம் ஆண்டுக்கு முன்பு பத்து ஆண்டுகள் மட்டுமே பொருளாதார விரிவாக்கம் சிறப்பாக இருந்தது.
தற்போதைய பொருளாதார சரிவு நிலை அடுத்த ஆண்டு மத்தி வரை நீடிக்கும். இதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை 70களில் ஒரு முறையும், 80களில் ஒருமுறையும் பொருளாதாரம் சரிந்தது. ஆனால் அவற்றை விட இப்போதுதான் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சரிவு மேலும் ஆழமாகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இதைத் தாண்டி நாம் போயாக வேண்டும். இந்த சரிவு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை கணிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்திக் குறைவு பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் ஜிடிபி விகிதம் சிறப்பானதாகவே இருந்தது. 2007ம் ஆண்டு டிசம்பர் வரை ஊதிய உயர்வு அதிகரித்தவண்ணம் இருந்ததாக கூறும் இந்தக் குழு, அதன் பின்னர் மாதந்தோறும் ஊதியக் குறைவு நிலவி வருவதாக தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்குப் பிறகுதான் பொருளாதார சரிவு விஸ்வரூபம் எடுத்ததாகவும் அது தெரிவிக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை ஏற்றுக் கொண்டுள்ளது. பொருளாதார சரிவையும் அது ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி பிராட்டோ கூறுகையில், பொருளாதார சரிவு உண்மைதான்.
இதை ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம், நிதி நிலைமை மேம்படும் என நம்புகிறோம். கடன் சந்தைகள் சகஜ நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். அந்த சாதக நிலையை மனதில் கொண்டு அரசு செயல்படும் என்றார்.
இதற்கு முன்பு ரிச்சர்ட் நிக்ஸன் அதிபராக இருந்தபோதுதான் அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது புஷ்ஷுக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது.
மூலம்: தட்ஸ்தமிழ்
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக