மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு அனுப்பியுள்ள நிலையில் அதை ஏற்று இன்று புதிய முதல்வரை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் முதலில் விலகினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலையும் உருண்டது. இருப்பினும் அவரை சில காலம் நீடிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதால் தற்போதைக்கு நாராயணன் தப்பியுள்ளார்.
இதையடுத்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் தேஷ்முக்கை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆர்.ஆர்.பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் நடந்த இக்கட்சிக் கூட்டத்தில் பாட்டீலை ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து கட்சித் தலைவர் சரத்பவார், பாட்டீலை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்தே விலகினார் பாட்டீல்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் மக்களை மீட்கும் முயற்சியில் உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், இந்த தாக்குதல் சாதாரண சம்பவம்தான், பெரிய விஷயமல்ல என்று உளறினார் என்பது நினைவிருக்கலாம்.
தேஷ்முக்கும் கடிதம் தந்தார்:
இதையடுத்து ஃபோகஸ் அப்படியே தேஷ்முக் பக்கம் திரும்பியது.
அவரும் பதவி விலக வேண்டும் என நெருக்குதல் வலுத்ததால், தனது விலகல் கடிதத்தை அவர் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்.
அந்தக் கடிதத்தை இன்னும் காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. இருப்பினும் இன்று கடிதத்தை ஏற்று, ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்குமாறு தேஷ்முக் அறிவுறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
ஷிண்டே புதிய முதல்வர்?
இந்த நிலையில் புதிய முதல்வராக யாரை நியமிப்பது என்ற தீவிர ஆலோசனையில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.
அனேகமாக மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இவர் ஏற்கனவே முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜகன் பூஜ்பால் துணை முதல்வர்?
இதற்கிடையே, மகாராஷ்டிர சட்டசபை தேசியவாத காங்கிரஸ் தலைவர் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் ஜகன் பூஜ்பால் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிண்டே முதல்வராகப் பதவியேற்கும்போது பூஜ்பால் துணை முதல்வராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது.
மூலம்: தட்ஸ்தமிழ்
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக