சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரக் கோரி வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சியினரும் பிரதமர் மன்மோகன் சிங்கை டிசம்பர் 4ம் தேதியன்று சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சட்டசபை கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று கூட்டினார்.
ஆனால், இது இன்னொரு டிராமா தான் என்று கூறி அதிமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன. அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக ஆகியவையும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் சுதர்சனம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், புரட்சி பாரதம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்கள்:
இலங்கையில் இருந்து ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் பொறுமையாக இருக்கவிடாத நிலையில், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என மேலும், வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது கடுமையாக குரல் கொடுத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.மத்திய அரசு தன்னால் இயன்ற அளவுக்கு குரல் கொடுத்து வருவதை தமிழகம் உணர்ந்தபோதிலும், இலங்கை அரசு அதனை மதிக்காத நிலையில் இந்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனையில் மேலும் வேகத்தை காட்ட வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் தலைமையில் டிசம்பர் 4ம் தேதியன்று டெல்லியில் பிரதமரை சந்திப்பது என்றும்,அதற்கிடையே நவம்பர் 28ந் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இன்னொரு நாடகம்-ஜெ.:
முன்னதாக இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் முதல்வர் கருணாநிதி தோல்வி அடைந்து விட்டார். இந்த நிலையில் கூட்டப்பட்டுள்ள சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்னும் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையே. தமிழர்களை ஏமாற்ற முதல்வர் அரங்கேற்றும் இன்னொரு நாடகம் இது.அக்டோபர் 14ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இலங்கையில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதை மத்திய அரசு 2 வாரத்திற்குள் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என கெடு விதித்தார்.
ஆனால் பின்னர் அந்தக் கோரிக்கையை கைவிட்ட அவர், மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக அறிவித்தார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது கருணாநிதிக்கே வெளிச்சம்.அதேபோல இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் போர் நிறுத்தம் கிடையவே கிடையாது என அறிவித்தார். இதையடுத்து நவம்பர் 12ம் தேதி போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல முதல்வரின் நடவடிக்கை கண் துடைப்பு என வைகோவும் விமர்சித்துள்ளார்.பயனில்லா கூட்டம்-விஜய்காந்த்:இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேமுதிகவை பொறுத்த வரை இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு வழிவகை காண வேண்டும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி மற்றும் இதர உதவிகள் செய்யுமானால், அதை உடனே நிறுத்த வேண்டும், இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்த வரை ராணுவத் தீர்வு சாத்தியம் இல்லை, அரசியல் தீர்வு மட்டுமே காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலை.
எவ்வளவு விரைவாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித உயிர்கள் காப்பாற்றப்படும். அவசர கோலத்தில் செயல்பட வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இதுவரை தங்கள் பொறுப்புகளை உணர்ந்ததாகத் தெரியவில்லை.இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களை டெல்லிக்கு தந்தி கொடுக்க சொல்வதும், மனித சங்கிலி நடத்துவதும், அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டுவதும் இங்குள்ள தமிழ் மக்களை, திசை திருப்ப பயன்படுமே தவிர, இலங்கையில் பற்றி எரியும் தீயை அணைக்கப் பயன்படாது.
அதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதும், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதும் தேவையற்றது என்றே கருதுகிறேன். எனவே தேமுதிக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்று கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக